பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்.10ம் தேதி, 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுத்து தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிக்கவும்: அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன்
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு தனிப்படைகள் சென்றன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த 4ம் தேதி திவாகரன், கஜேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கங்காதரன் மற்றும் ஸ்டீபனை சென்னை திருவிக நகர் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.








