டிரம்பிற்கு எதிராக கிரீன்லாந்து மக்கள் பேரணி…….!

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கிரீன்லாந்து மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

சீனா, ரஷ்யா நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் ‘கோல்டம் டோம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்க டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த கோல்டம் டோம் பாதுகாப்பு அமைப்பு  வான்பரப்பை கண்காணித்து அமெரிக்கா மீது ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

தான் உருவாக்கி வரும் கோல்டன் டோம் திட்டத்திற்கு மிகவும் அவசியமானது எனக்கூறி டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டொனால்ட் டிரம்பு முயற்சித்து வருகிறார். ஆனால் இதற்கு டென்மார்க் அரசு மற்றும் கிரீன்லாந்து மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் கிரீன் லாந்தை கைப்பற்றும் டிரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் தனது நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் பின் வாங்காத டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே போல கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பேரணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்போராட்டத்தில் ’கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்துடன் பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். கிரீன்லாந்தின் தலைநகர் நூக் நகரில் இருந்து அமெரிக்க துணை தூதரகம் வரையில் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.