தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக…

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் ஓங்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சி செய்த கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் விருதுகளை அதிமுக அரசு குவித்து வருவதாகவும் துணை முதல்வர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் 3,500 கோடி ரூபாய் அளவிற்கு நில அபகரிப்பு நடந்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்தபோதும், காவிரி பிரச்னையை தீர்க்க திமுக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். சட்டப்போராட்டம் மூலம் காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான் என்றும் அவர் கூறினார். அதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் துணை முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.