காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் மே 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் காலை 11:30 மணி அளவில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது.
இக்கூட்டத்தில் ஹரங்கி அணையின் நீர் தேக்கம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்தும், தமிழ் நாட்டிற்கு தரப்பட வேண்டிய நீர் அளவு தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இருக்கும் வானிலை மற்றும் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் இருக்கும் நீரின் அளவு உள்ளிட்டவை தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை நியாயமாக பகிர்ந்து வழங்குவதே இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50 கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், வருகின்ற மே. 28 ஆம் தேதி 51வது கூட்டம் டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.




