முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்

வடமாநிலம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்ததால் மூன்று பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகே நடுவழியில் ரயிலை நிறுத்தி மூன்று…

வடமாநிலம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்ததால் மூன்று பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமலூர் அருகே நடுவழியில் ரயிலை நிறுத்தி மூன்று பெண்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். தங்கள் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்து
அமர்ந்து கொண்டு பெண்களை மிரட்டியதால் அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை
மறித்ததால் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே தின்னபட்டி வழியாக சென்னை, பெங்களூர்
மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கு பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் வழியாக பாட்னா சென்றது.

இதனையும் படியுங்கள் : திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை

சேலத்தை கடந்து வேகமாக சென்ற கொண்டிருந்த ரயில், ஓமலூர் அருகேயுள்ள
கருப்பூர் ரயில் நிலையத்திற்கும், தின்னப்பட்டி ரயில் நிலையத்திற்கும் இடையே
அபாய சங்கிலியை இழுத்ததால் திடீரென நின்றது. நின்ற ரயிலில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டம் நடத்திய மூன்று பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்திருந்த இருக்கையை, யாரோ சிலர் ஆக்கிரமித்து அமர்ந்துகொண்டு எங்களுக்கு இடம் கொடுக்காமல் எங்களை மிரட்டுகின்றனர். மேலும், எங்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால், அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் சமாதானம் செய்த ரயில்வே அதிகாரிகள், அவர்கள் மூவரும் அமர்வதற்கு அடுத்த ரயில் நிலையத்தில் உரிய ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மூன்று பெண்களும் மீண்டும் ரயிலில் ஏறினர்.
பெண்களின் திடீர் போராட்டத்தால் சுமார் 20 நிமிடம் நடுவழியில் பயணிகளுடன்
ரயில் நின்றது.

இதனால், பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரயில் நடுவழியில் சுமார் 20 நிமிடம் நின்று தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு இருக்கைகளில் அமர்ந்துகொண்டு மிரட்டும் சம்பவம் ரயில்களில் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தமிழக கேரள பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.