தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் தற்போது தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி காம்போவில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீ லீலா சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நான் டாக்டருக்கு படித்துவிட்டு நடிக்க வந்தேன். மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய ஆசை இருக்கிறது. இப்போது டாக்டர் படிப்பில் இன்டர்ன் ஆக இருக்கிறேன். வருங்காலத்தில் மக்களுக்கு சேவை செய்யலாம்” என்றார்.

தொடர்ந்து தனது அம்மாவை பற்றி பேசிய அவர், “நான் சினிமாவில், நடிப்பில், வாழ்க்கையில் ஜெயிக்க என் அம்மாதான் காரணம். அவர்தான் என் வலிமை. என் ஒவ்வொரு அடி முன்னேற்றத்திலும் அவர் இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, எல்லா மகன், மகள்களுக்கும் அம்மா முக்கியம்தானே” என்று கூறினார்.
தனது வெற்றி தோல்வி குறித்து பகிர்ந்து கொண்ட ஸ்ரீ லீலா, “எல்லாருடைய வாழ்க்கையிலும் வெற்றி தோல்வியும் மாறி, மாறி வரும். அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தோல்வி அடைந்தால் ஒரு மணி நேரம் அழுவேன். அடுத்து முகத்தை பார்ப்பேன். அடுத்த வேலைக்கு சென்றுவிடுவேன்.

எல்லா மனிதர்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு சந்தோஷம், வலி இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். இப்போது இந்தி படங்களில் நடிக்கிறேன். இப்போது தென்னிந்தியா, வட இந்தியா என்ற நிலை இல்லை. நல்ல சினிமாவில் நான் இருக்க நினைக்கிறேன்” என்றார்.
லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி பேசிய ஸ்ரீ லீலா, “என்னை சிலர் லேடி சூப்பர்ஸ்டார் என்கிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். என் பேவரைட் நடிகை நயன்தாரா அக்கா. அவர்தான் அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர். அவர் என் ரோல்மாடல். சென்னை பசங்களை ரொம்ப பிடிக்கும். நயன்தாரா மாதிரி சென்னையில் திருமணம் செய்வேனா என தெரியவில்லை. அதற்கு காலம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இறுதியாக அவர், “சென்னை தோசை ரொம்ப பிடிக்கும். நான் விமானப்பயணம் அடிக்கடி செய்வேன். இப்போதும் ஒவ்வொரு முறை அது தரை இறங்கும்போது பயமாக இருக்கும். விமானத்தில் பயணம் செய்யும்போது அனைவருக்காக பிரார்த்தனை செய்யணும். விமானம் தரையிறங்கிய பின் பைலட், மற்ற குழுவுக்கு கை தட்டி நன்றி சொல்ல வேண்டும் என்று என் சின்ன வயதில் இருந்தே அம்மா சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அதை இப்போதும் செய்கிறேன். சில முறை ஒட்டுமொத்த விமானத்தில் நான் மட்டுமே கைதட்டியிருக்கிறேன். அந்த சத்தம் அவர்களை சென்றடையும், அது அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்” என்று பேசி முடித்தார்.







