தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் முதலில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. மூன்றாவதாக தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பதவியேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ் நாட்டின் கஜானா காலியாக உள்ளதாகவும் 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் கூறி முந்தைய திமுக ஆட்சியை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் முதலில் இசைக்கப்படும். வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தாலும் அதனை தமிழக அரசு மறுத்து வந்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் மதம் சார்ப்பு கருத்தை கொண்டிருப்பதாக சர்ச்சை ஒன்று இருக்கிறது. பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா..? அல்லது ஆளுநரின் விருப்பமா..? எனத்தெரியவில்லை. இதற்குரிய விளக்கத்தை விஜய் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாஜக, அதிமுக ஆதரவை நாடாமல் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார். மதசார்பற்ற அரசை நிறுவுவது நோக்கம் என தவெக தரப்பில் சொல்லப்பட்டதால் ஆதரவு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது. விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம்” என்று தெரிவித்தார்.







