தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள ஆதரவினால் தவெக பெரும்பான்மை பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று தவெக தலைவர் விஜய், தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
முதலமைச்சர் விஜய், தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார். தொடர்ந்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தமிழ் நாட்டின் 17-வது சட்டமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று வருகின்றனர்.







