கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கிளம்பி, இன்று அ.தி.மு.க. ஆக்சிஜனில் பா.ஜ.க. உயிர்வாழ்வது தான் அழகா என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று முரசொலியில் செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. இந்த தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
” பா.ஜ.க. ஆட்சி குறித்து ஏராளமான கேள்விகளை திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வைத்துள்ளது. அவை எதற்கும் பதில் அளிக்காத பிரதமர் நரேந்திர மோடி , காங்கிரசுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாமா, உங்கள் ஆட்சியைக் கலைத்தது காங்கிரசுதானே என்று கேட்கிறார்.
தி.மு.க. முன் வைத்தது அனைத்தும் ஆட்சிரீதியாக, நிர்வாகரீதியான புகார்கள். ஆனால் பிரதமர் கேட்பது அரசியல்ரீதியான கேள்வியாகும். அதற்கு அரசியல் ரீதியான பதிலையே சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பா.ஜ.க. ஆட்சி கவிழ்க்கப்பட்ட அன்று, ‘நான் இன்று நிம்மதியாக உறங்குவேன்’ என்றார் வாஜ்பாய். ‘எனது வாழ்க்கையில் மனநிம்மதி இல்லாத காலம் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்திருந்த காலம்’ என்றார் வாஜ்பாய். இதே அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறது.
இவை அனைத்துக்கும் மேலாக “மோடியா? லேடியா” என்று கேட்டு – தேர்தல் பிரச்சாரம் செய்தவர் ஜெயலலிதா. மேலும் ‘இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி அல்ல, இந்த லேடி தான்’ என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. குஜராத் வளரவே இல்லை, தமிழ்நாடு தான் வளர்ந்துள்ளது என்று சொன்னவர் ஜெயலலிதா. அவர் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.
இவை அனைத்துக்கும் மேலாக, – “எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை, தனித்தே ஜெயிப்போம், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணியைப் பற்றி முடிவெடுப்போம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி சொன்னபிறகும், “உங்கள் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்லிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு வெட்கமில்லையா? ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று கிளம்பி, இன்று அ.தி.மு.க. ஆக்சிஜனில் பா.ஜ.க. உயிர்வாழ்வதுதான் இந்தியாவின் ‘இரண்டாவது இரும்பு மனிதருக்கு’ அழகா? “ என்று முரசொலி நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
– யாழன்







