வளர்ப்புத் தாய் தம்மை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாக கூறி மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாலினி ஷர்மா. இவரை பெற்ற அம்மா இல்லாததால், வளர்ப்பு தாயான சுதா ஷர்மா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். தற்போது முதுகலைப் பட்டதாரிப் பெண்ணான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், தம்முடைய வளர்ப்புத் தாய் மீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தம்முடைய வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்தரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர். அவர் தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கெனவே மாந்தரீகம் மூலம் தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் நரபலி கொடுத்துவிட்டார். இந்த நிலையில் என்னையும் நரபலி கொடுக்க முயற்சி செய்து வருகிறார். எனவே நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17-ம் தேதி சென்னைக்கு வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் செல்ல முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில் வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு அழைத்துச் சென்று விட்டால், அங்கு வைத்து தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என்பதனால் பாதுகாப்பு வேண்டி தமிழ்நாட்டுக்கு ஓடி வந்துள்ளேன். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தமக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன்பு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா