டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: 15 ஆண்டுகளுக்கு பின் வாய்ப்பை இழந்த பாஜக

டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ…

டெல்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜகவின் ரேகா குப்தாவை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்று இப்பதவியை கைப்பற்றியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை இன்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 இடங்களில் பாஜகவும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. இதன் மூலம் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பின்னர் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம் மாமன்றத்தில் புயலை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் காரணமாக மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

இச்சூழலில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவே, அவ்வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், “நியமன உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று அரசியலமைப்பு விதி மிகவும் தெளிவாக உள்ளது” என்று சில நாள்களுக்கு முன்பு தீர்ப்பளித்தனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், எம்சிடி மேயர் தேர்தலில் மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய் 150 வாக்குகளும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளும் பெற்றனர். இதன்
மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரேகா குப்தாவை வீழ்த்தி ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார்.

இந்த முடிவின் காரணமாக 15 ஆண்டுகளாக பாஜக வசமிருந்த டெல்லி மேயர் பதவி தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளதோடு, 10 ஆண்டுகளுக்குப் பின் பெண் மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய்க்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.