காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு நிலத்தை ஆக்ரமித்து அந்த இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தங்களது அலுவலகமாக மாற்றி பயன்படுத்தியதாக தெரிகிறது. அதனை அகற்றக் கூறி அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த திலகவதி என்பவர் ஆரணி காவல்நிலத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
புகார் மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.விசாரணையின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் என்பவர், ஆரணி நகர காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் திட்டியதோடு, அவரது சாதி குறித்து பேசியதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்த வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்ய உத்தரவிடவே, போலீசார் அவரை இரவோடு இரவாக கைது செய்தனர் . இதனை கண்டிக்கும் விதமாக , ஆரணி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகளில் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று, ஆரணி மணி கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் பேரணியாக வந்து ஆரணி நகர காவல் நிலையத்தையும், முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர்கள் சாலமோன் ராஜா, வேலூர் நகர காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு ஆரணி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளதால் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









