தமிழ் நாட்டில் அடுத்தாண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசியில் கட்சிகளும் மக்கள் சந்திப்பு, கூட்டணிப் பேச்சு வார்த்தை எனத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. மாநிலத்தை பொறுத்த வரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாதக, விஜயின் தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஒரு நாள் பயணமாக இன்று தமிழ் நாடு வந்துள்ளார். காலையில் தியாகராயகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர் கூட்டாணி கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.








