தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…

கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நடைபெறும், ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என சாடினார். தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டம், சாலை பணிகள், மேம்பால பணிகள் எல்லாம் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய 30 ஆயிரம் கோடி குறித்து விசாரணை நடத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறி முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில்தான் உள்ளார்கள். காரணம் அவர் தங்களைப்பற்றிய ரகசியங்களை கூறி விடுவாரோ என்ற அச்சத்தில்தான். திமுக ஆட்சியில் தற்போது அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.