ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 7 பந்தில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதனைத் தொடர்ந்து இப்ராஹிம் 11 ரன்களுக்கும், ரஹ்மத் ஷா 5 ரன்களுக்கும், டார்விஷ் ரசூலி ஒரு ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஓமர்சாய் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த இணை 105 ரன்கள் எடுத்த நிலையில் ஓமர்சாய் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிதானமாக ஆடிய ஹஸ்மதுல்லா ஷஹி சதமடித்தார். இவர் 131 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த நிலையில் பிரசித் கிருஷ்னா வீசிய பந்தை ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 218 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 வெக்கட்டுகளை வீழ்த்து அசத்தினார். குர்நூர், ப்ரின்ஸ் யாதவ், தூபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்நிலையில் இந்திய அணி 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.




