மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது ‘போதையில்லா தமிழ்நாடு’ தவெக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பல்வேறு குற்றங்களுக்கு மிக அடிப்படையாக இருப்பது இந்த போதை கலாச்சாரம் தான். ஆளுநர் உரையில், தமிழ்நாடு முதலமைச்சர் ‘போதையில்லா தமிழ்நாடு’ என்கிற முழக்கத்தை முன்வைத்துள்ளார். அதை 100 சதவீதம் நிறைவேற்றினாலே, சமூகத்தில் நடக்கும் குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும்.
இதற்கு சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆண் குழந்தைகளை பெண்களை மதிக்கத் தெரிந்தவர்களாக இந்த சமூகம் வளர்த்தெடுக்க வேண்டும். இதில் சமூகத்திற்கும் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதேபோல், குற்றங்கள் நடந்த பிறகு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவித தயவுதாட்சண்யமும் இல்லாமல் துரித நடவடிக்கை எடுத்து, சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தருவதில் தவெக ஆட்சி சமரசம் செய்துகொள்ளக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.




