கொரோனா முன்களப் பணியாளர்கள் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், மருத்துவ கழிவுகளை கையாளும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் ஊடகத்தினர் 250 பேர் உயிரிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, காவல்துறை, தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள சினிமா தியேட்டர் ஊழியர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினருக்கு 10,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்திரவிட வேண்டும்.” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இது குறித்து தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.







