மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அக். 9 ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, நவம்பா் 7, 17, 25, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பா் 17-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படவுள்ளது. தோ்தல் தேதி அறிவிப்பைத் தொடா்ந்து, மேற்கண்ட 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் பொதுச் செயலாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரந்தீப் சுர்ஜேவாலா பேசியதாவது:
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும். மேலும் இந்த சந்திப்பின் போது நிறைய இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி நகர்வதை இது காட்டுகிறது. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.







