தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் அலுவலர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 16,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, அக்டோபர் 16ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள் : பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!
இந்நிலையில் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கர்நாடக நீர்வளத்துறைச் செயலாளர் ராகேஷ் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.







