சமீபத்தில் தமிழ் சினிமாவில் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தை ஒட்டுமொத்த திரையரங்கும் இந்தளவு ஆர்ப்பரித்து கொண்டாடி தீர்த்ததை பார்த்ததில்லை. அந்த அளவு பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய கிளர்ச்சியை பிரதீப் ரங்கநாதன், இவனா நடித்துள்ள லவ் டுடே படம் ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் கொண்டாடி மகிழ இந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் உள்ளது. வேறொன்றுமில்லை, பழைய அதே ஆணாதிக்க சிந்தனை, நாம் சிரித்துக்கொண்டிருக்கும் போதே நம் முகத்தில் தூக்கி எறியப்படுகிறது. ஆனால், நமக்கு அதை பார்த்து கோபம் வருவதில்லை, மாறாக கிளர்ச்சி ஏற்பட்டு, ஆர்ப்பரிக்கிறோம். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், படம் பார்க்க வரும் அனைவரையும் சிரிக்க வைத்து அவர்களிடம் ஆணாதிக்க மனப்பான்மையை லாவகமாக கொட்டுகிறார் இயக்குனர். ஒரு வேளை அது தான் இந்த திரைப்படத்தின் வெற்றியாக கூட இருக்கலாம்.
பொதுவாக திரைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கும் போதெல்லாம் படங்கள் மீது காதல் கொண்டுள்ள நம் மக்கள் பலரும் படத்தை படமாக மட்டும் பாருங்கள் என சொல்வதை கவனித்திருக்க கூடும். அப்படி, படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என சொல்வதன் விளைவே இது மாதிரியான படங்களை நம்மை மகிழ்ச்சியோடு சுமக்க வைத்துவிடுகின்றது.
உண்மையில் திரைப்படங்கள் வெறும் படங்கள் மட்டும் அல்ல, எனவே அதை படமாக பார்க்கும் கண்ணோட்டத்தை நாம் கைவிட வேண்டும். திரைப்படங்கள் இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பு. ஒரு கதாசிரியரின், இயக்குனரின் கற்பனையாக திரைப்படங்கள் இருக்கலாம், ஆனால் அது முழு வடிவம் பெற்று திரையரங்குகளில் வெளியாக, கண்ணுக்கு தெரியாத பல உழைப்பாளர்கள் பங்கு உள்ளது. எளிய டச் அப் பாய் முதல் தொழில் நுட்ப கலைஞர்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள், திரையரங்கு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கான எளிய உழைப்பாளிகளின் பங்கு ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு பின், மறைந்துள்ளது.இந்த, சமூக கூட்டு உழைப்பு மூலம் உருவாக்கப்படும் ஒரு பொருள் அந்த சமூகத்திற்கு நன்மையையே பிரதிபலனாக வழங்க வேண்டும். மற்றவற்றை தந்தால், அதை ஒதுக்கி தூக்கியெறிய வேண்டியது நம் அனைவரது கடமை, பொறுப்பு. தனி மனித லாபம், தனி மனித புகழ், தனி மனித வெற்றி இவற்றை மட்டுமே மையமாக வைத்து இது போன்ற பல திரைப்படங்கள் இங்கு உருவாக்கப்படுகின்றன.
லவ் டுடே படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், “நான் எந்த இடங்களில் எல்லாம் மக்கள் கைத்தட்டி ரசிப்பார்கள் என சிந்தித்து காட்சிகள் அமைத்தேனோ, அதே மாதிரி அந்த இடங்களில் எல்லாம், மக்கள் ரசித்து கொண்டாடினார்கள் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறுகிறார். இதில் இருந்தே தெரிகிறது, வெறும் வியாபார வெற்றி ஒன்றை மட்டுமே மனதில் வைத்து, அடிப்படை அறம், சமூக அக்கறை என ஒரு படைப்பாளருக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவை எதுவும் துளியும் இல்லாமல், வியாபார வெறியுடன் இந்த படத்தை எடுத்துள்ளார்கள் என்பது விளங்குகிறது.
இந்த திரைப்படம் எந்த விதத்திலும் சமூக நன்மைக்கு பயன்படபோவதில்லை என்பது படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். பிறகு யாருக்கு நன்மை பயக்கும். வேறு யார், தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தான் என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம்.
சம கால காதல், காதலர்கள் இடையே இருக்கும் பிரச்னையை “லவ் டுடே” படம் பேசுகிறது. ஆண் – பெண் இரு தரப்பினர் இடையே தவறுகள் இருக்கும் போதும், பெரும்பாலும், ஆண் கதாப்பாத்திரத்தை ( பிரதீப் ரங்கநாதன்) மையப்படுத்தியே படம் சுழல்கிறது. அவரது பார்வையிலேயே பெரும்பாலான கதை நகர்கிறது. அப்போதெல்லாம், பெண் கதாப்பாத்திரத்தை ( இவானா) அவர் அநாகரிகமாக கலாய்க்கும் வசனங்கள், திரையங்கில் உள்ள ரசிகர்களை கிளர்ச்சியடைய செய்து தன்னிலை மறந்து கத்த வைக்கிறது.
அந்த வசனங்கள், எல்லா இளைஞர்களாலும் கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டு சமூகத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கொச்சையான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது இந்த படம் ஏற்படுத்தியுள்ள பேராபத்து அச்சமடைய செய்கிறது.

பெண்களை வெறும் பொருளாக பார்க்கும் ஆண்களின் பார்வைக்கு சமூக வலைத்தளங்கள் கட்டற்ற சுதந்திரம் கொடுத்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தில் ஒரு காட்சி உள்ளது. கழிவறையில் அமர்ந்து கொண்டு கதாநாயகியின் கைப்பேசியில் அவரது சமூக வலைதள பக்கத்தை கதாநாயகன் ஆராய்கிறான். ஒரு பெண்ணை சமூக வலைத்தளங்களில் உள்ள ஆண் சமூகம் எந்த அளவு காம வக்கிரத்தோடு பார்க்கிறது, அணுகுகிறது எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது என்பதற்கு அந்த காட்சி சாட்சியமாக உள்ளது. இதை பார்த்தும் கதாநாயகியின் பக்கம் நிற்காமல் அவருக்கு சமூக வலைத்தளங்களில் தொல்லை அளித்த மற்றவர்களை விட மோசமாக நடந்து கொள்கிறார் கதாநாயகன், அதையும் நாம் கைதட்டி விசிலடித்து கொண்டாடுகிறோம்.
வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படும் ஆணாதிக்க மனோபாவத்தை, சற்று சென்டிமென்ட் கலந்து இறுதி காட்சியில் கொடுத்துள்ளார் இயக்குனர். படம் முழுவதும் மோசமாக நடந்து கொள்ளும் கதாநாயகன், இறுதி காட்சியில், ஆபத்தில், நிர்கதியாக, இருக்கும் கதாநாயகிக்கு ஆதரவு அளித்து தான் கதாநாயகன் என்பதை நிரூபிக்கிறார்.
வசனங்கள் மோசமாக இருப்பது மட்டுமல்லாமல், வன்மம் கொண்டவையாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. கன்னியப்பன், முனுசாமி போன்ற எளிய உழைக்கும் சமூகத்து ஆண்கள் எல்லாம் காதலிக்க லாயக்கற்றவர்களாக சொல்வதை எந்த வகையில் ஏற்று கொள்வது என தெரியவில்லை. ஆக மொத்தம் லவ் டுடே திரைப்படம், காதலர்களுக்கு இடையேயான அந்தரங்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வியாபாரமாக்கி வெற்றி கொடி நாட்டியுள்ளது.
- தாமரைசெல்வன்







