வசூல் வேட்டையில் கலக்கி வரும் லவ் டுடே திரைப்படம். 2k கிட்ஸ் காதலால் மீண்டும் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றுள்ளதா என்பதை தற்போது பார்க்கலாம்.
முன்னணி ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே திரையரங்கை ஆக்கிரமித்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2k கிட்ஸ் காதலையும் செல்ஃபோன் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மையமாக வைத்து நகைச்சுவை கலந்த காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு இயக்கிய கோமாளி திரைப்படத்தை போலவே இந்த படத்திலும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2k கிட்ஸ் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அறிமுக நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்வதில்லை என்ற பிம்பத்தையும் இந்த படம் உடைத்துள்ளது.
குறிப்பாக படம் வெளியாகி 4 நாட்கள் மட்டுமே ஆனா நிலையில் தற்போது வரை இந்த படம் 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்திற்காக மொத்த செலவே 10 கோடி என கூறப்படுகிறது.
சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் அறிமுக நடிகர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்த நிலையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை லவ் டுடே மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.
– தினேஷ் உதய்







