‘என்னை நீங்கள் கைவிடவில்லை’ – “லவ் டுடே” இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

’லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது நிஜமா என்று இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக…

’லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது நிஜமா என்று இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’லவ் டுடே’. இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2k கிட்ஸ் காதலையும் செல்ஃபோன் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மையமாக வைத்து நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த 4ஆம் தேதி வெளியானது.

பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு இயக்கிய கோமாளி திரைப்படத்தை போலவே இந்த படத்திலும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2k கிட்ஸ் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அறிமுக நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூல் செய்வதில்லை என்ற பிம்பத்தையும் இந்த படம் உடைத்துள்ளது.

நாளுக்கு நாள் ’லவ் டுடே’ படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருகிறது. நேற்று திங்கட்கிழமை, ஆனாலும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.

நான் நட்சத்திரம் இல்லை. உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கைதூக்கிவிட்டீர்கள். நன்றி.

நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.