“கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார்” – அன்புமணி குற்றச்சாட்டு!

கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கர்நாடகாவில் காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என 4 நாள் நடைபயணத்தில் 3 வது நாள் இன்று. காவிரி டெல்டா பாலைவனம் ஆகும். 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர். மதுரையில் வைகை வந்தாலும் அத்தனை மாவட்டங்களும் காவிரி நீரைத் தான் அருந்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநிலத்தில் அவர்களுக்கு தேவையானதை செய்து கொள்கிறார்கள்.

நம் அனுமதி இல்லாமல் பல அணைகளை கட்டிக் கொண்டனர். அதேபோல் இப்போதும் கட்ட துடிக்கும் அணை 70 டி.எம்.சி கொண்டது‌. கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார். தமிழ்நாட்டுக்கு பயன்படும், குடிநீர் திட்டம் என சொல்கின்றனர். பெங்களூருக்கு 4.75 டி‌.எம்.சி வழங்கப்படுகிறது. மேலும் 5 டி.எம்.சி தேவைப்படும் நிலையில் 70 டி.எம்‌‌.சி அணை கட்டப்பட உள்ளது. இதில் பாசனத்திற்கு பயன்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அதனை மாற்றி பயன்படுத்தினாலும் கேட்க முடியாது.

கர்நாடகாவில் உள்ள 4 அணை 115 டி.எம்.சி. ஆக மொத்தம் 185 டி.எம்.சி ஆகி விடும். அதனால் இப்போது வரும் தண்ணீர் கூட வராது. காவிரியில் இப்போதே தண்ணீர் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் ஜுன் மாதம் 9.1 டி.எம்.சி தண்ணீர் வழங்க கூறி ஒப்புக் கொண்டது. ஆனால் 2 டி.எம்.சி தான் திறந்து விட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.