அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிமன்றம், அக்டோபர் 16-ம் தேதியான இன்றைய தினம் ஸ்டான்லி மருத்துவமனை அளித்துள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை கருத்தினை பெற்று நீதிமன்றத்திற்கு அளிக்கவும்,  ஜாமீன் மனு குறித்த பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.

இதனைதொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த திங்கள் (அக்.16) அன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் ஆஜராகினர்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ”மெரிட் அடிப்படையில் இந்த ஜாமீன் மனு மீது வாதிடவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது.  கைது செய்யப்பட்ட அன்றே உடல் நிலை சரியில்லாததால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆட்கொணர்வு மனு மீதான நீதிமன்ற உத்தரவை இந்த ஜாமீன் மனு மீதான பதில் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கலாம் என அமலாக்கத்துறை கூறுகிறது.  ஆனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு அது சாத்தியமில்லை.  நீதிமன்றமே எந்தவொரு மருத்துவரையாவது நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யட்டும்” என வாதிடப்பட்டது.

தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில்,  “சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்ற காவலிலோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும்.  ஆனால் அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை.  ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, உட்காரவோ செந்தில் பாலாஜியால் முடியவில்லை என கூறுகிறார்கள்.  ஆனால் அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்க வேண்டுமென யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை.

செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை என்பது மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரும் பிரிவின் கீழ் வரவில்லை. இதே காரணத்தை தான் முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் கூறினார்கள்.  அதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கவில்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் அனைத்து துறை மருத்துவர்களும் அளித்துள்ள கருத்துகளும் ஒரே மாதிரியாக உள்ளன.

ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையின்படி செந்தில் பாலாஜி வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற தேவையில்லை.  ஜாமீனில் வெளியில் வந்தால் செந்தில் பாலாஜி ஆதாரங்களை கலைப்பார்.  இதனால் வழக்கு பலவீனமாகும்.  செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் உள்ள ஆவணங்கள் படி சுமார் ரூ.67 கோடி சட்ட விரோத பண இருப்பது தெரியவந்துள்ளது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா?, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது.  அதற்கு உங்கள் பதில் என்ன? என செந்தில் பாலாஜி தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயற்சிக்கமாட்டார்.  வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் இருக்கும் போது எப்படி அதனை கலைக்க முடியும். இதய அறுவை சிகிச்சை சாதாரணமானது என அமலாக்கத்துறை கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தால் இதே போல கூறுவார்களா? இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றம் செய்தார் என்பதை அமலாக்கத்துறையால் நிரூபிக்க முடியாது.” என பதிலளித்தார்.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.