திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது என திமுகவின் முரசொலி தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.
செலக்டிவ் அம்னீசியா எனும் தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் எழுதியுள்ளது. இந்த தலையங்கத்தில், காங்கிரசுடனான கூட்டணி குறித்து பிரதமர் எழுப்பிய கேள்விக்கு முரசொலி பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக முரசொலி இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ஆட்சியைக் கலைத்த காங்கிரசுடன் திமுக கூட்டணி வைக்கலாமா என்று பிரதமர் மோடி கேட்ட கேள்வி அரசியல்ரீதியானது என்பதால் அதற்கு அரசியலரீதியாகவே பதிலளிக்க வேண்டிய கடமை இருப்பதாக கூறியுள்ளது. தனது வாழ்க்கையில் மனநிம்மதி இல்லாத காலம் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்த காலம்தான் என வாஜ்பாய் கூறியதை குறிப்பிட்டுள்ள முரசொலி, அந்த அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி வைத்துள்ளது என விமர்சனம் செய்துள்ளது.
மோடியா, லேடியா என்று கேட்டு பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, சிறந்த நிர்வாகி மோடி இல்லை இந்த லேடி தான் என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ள முரசொலி, அவரது கட்சியோடு தான் பாஜக கூட்டணி வைத்திருப்பதாக கூறியுள்ளது. கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கிளம்பி இன்று அதிமுக ஆக்சிஜனில் உயிர்வாழ்வது தான் இந்தியாவின் இரண்டாது இரும்பு மனிதருக்கு அழகா என்று முரசொலி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
இதனையும் படியுங்கள்: அரசியலில் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்- சி.பி.ராதாகிருஷ்ணன்
திமுக நாளேடான முரசொலி எழுதியுள்ள இந்த தலையங்கத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசியில் அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் “1967 முதல் தற்போது வரை கூட்டணிக் கட்சிகளால் தான் திமுக ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் திமுக தான் வாழ்கிறது. கடந்த 43 ஆண்டுகளில் பாஜக 2 முறை தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கில் பாஜகவை அதிமுக தவிர்க்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , ” ஈரோடு கிழக்கில் பாஜக நிர்வகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். இது சிலருக்கு தெரியாமல் இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா










