சர்வதேச விமான கண்காட்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு- பிரதமர் மோடி

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கு பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியே சிறந்த உதாரணம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். பெங்களூரு எலகங்கா விமானப் படை தளத்தில் 14-வது சர்வதேச விமான…

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கு பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியே சிறந்த உதாரணம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

பெங்களூரு எலகங்கா விமானப் படை தளத்தில் 14-வது சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடங்கியது. சர்வதேச விமான கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி வரும் 17ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, விமானப்படை தளபதி விவி சௌத்ரி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், புதிய இந்தியாவின் திறமைக்கு, இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 100 நாடுகளை சேர்ந்த 700க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இது இந்தியா மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதனை வெறும் நிகழ்ச்சியாக கருதிய காலம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாடு இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது.

இதையும் படிக்கவும்: திமுக தான் கூட்டணிக் கட்சிகளின் ஆக்ஸிஜனில் வாழ்கிறது – பாஜக பதில்

இன்று இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, இந்தியாவின் பலமும் கூட. இன்றைக்கு உலகளவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சந்தையாக மட்டுமல்லாமல், ஆற்றல் மிகுந்த பாதுகாப்பு கூட்டாளியாகவும் இந்தியா உள்ளது. பாதுகாப்பு துறையில் முன்னணி நாடுகளுடன் இணைந்து இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.

21-ம் நூற்றாண்டில் இந்தியா எந்தவொரு வாய்ப்பையும் இழக்காது. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வர கடினமான உழைக்க வேண்டும். கடந்த பல வருடங்களாக பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.

இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். பாதுகாப்புத்துறையில் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் 2024-25ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு தளவாட பொருட்கள் ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.