“நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஹாய தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விசிக, IUML ஆகிய கட்சிகளும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், முதலமைச்சராக விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன.

இந்த விழாவில் பங்கேற்க சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. மேலும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், விஜயின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து விழாவிற்கு வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய், C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அவருடன் ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில், 200 யூனிட் மின்சாரம், சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு, மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய்,

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் – தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன்.

நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், சினிமாவில் மிகப்பெரிய இடத்தை எனக்குக் கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை ‘நீ வா விஜய் பார்த்துக் கொள்வோம்’ என்று சொல்லி, அவ்வளவு அன்பாகவும் அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

இந்த நேரத்தில் இதை நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பயணத்தில் எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும், என்னுடன் இருந்த உங்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களும் அவமானங்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், என்னுடைய வலிகளையும் வேதனைகளையும் உங்களுடையதாக நினைத்துக் கொண்டு, என் கூடவே நின்று, இன்று ‘சி. ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள்.

எது சாத்தியமோ அதுமட்டும்தான் நான் செய்வேன். அப்போ சாத்தியம் இல்லாத்தை செய்ய மாட்டியா? என நீங்கள் கேள்வி கேட்பது தெரிகிறது. இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதி எனக்கு உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன். அதன் பின்னர் முன்னோக்கி செல்ல உள்ளேன். இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள். அதேபோல எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். போதைப்பொருளை ஒழிப்பேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தான்.

ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்தில் ஒரு பைசவும் தொட மாட்டேன். விஜய் தப்பு பன்ன மாட்டான். தப்பு பன்னவும் விடமாட்டான். என் கூட இருப்பர்களாக இருந்தாலும் சரி. நாம் ஜெயித்துவிட்டோம். ஒரு ஆட்டம் ஆடி பார்த்துவிடலாம் என நினைப்பர்வர்கள் இப்பவே சென்றுவிடுங்கள். இங்கு ஒரே பவர் செண்ட்டர்தான்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என அனைவரும் நமது அரசில் நல்லா இருப்போம். சிறுபாண்மை சகோதரர்களுக்காக நமது அரசு கூடவே இருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. விஜய்யின் குட்டி நண்பா, நன்பிகளுக்கு நன்றிகள். உங்களுக்காக அனைத்து நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான். முக்கியமாக தமிழக வெற்றிக்கழக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. இது ஒரு புதிய தொடக்கம். மீண்டும் மீண்டும் சந்திப்போம். வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.