கரூர் அரசுப்பணி ரத்து செய்யப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது..

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை கடந்த 27ம் தேதி விசாரித்த நீதிபதி, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து பணி ஆணை வழங்கி இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.