டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு, சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிப் பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.