தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டின் மொத்த கடன் குறித்த விபரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கடன்கள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
“ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் மாநில அரசு 143,197.93 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!
மேலும், 51,331.79 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 726,028.83 கோடி ரூபாயாகும்.
2023-24ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் இது 25.63 சதவீதம் ஆகும்.
மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் 25.63 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில் 25.82 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– யாழன்







