கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃபிரிடி, ரசிகரின் விருப்பத்திற்க்காக இந்திய நாட்டு தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் உலகளவில் பிரபலமான முன்னாள் வீரர்களை வைத்து நடத்தப்படும் லெஜெண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய மகாராஜா, ஆசிய லயன்ஸ், மற்றும் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் என மொத்தம் 3 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த நிலையில், இறுதி போட்டிக்கு ஆசிய லயன்ஸ், மற்றும் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணிகள் தகுதி பெற்று இன்று மோத உள்ளது. இதில், ஆசிய லயன்ஸ் அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சாகித் அஃபிரிடி கேப்டனாக உள்ளார். கடந்த மார்ச் 18 அன்று நடைபெற்ற போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய மகாராஜா அணியை ஆசிய லயன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அன்று போட்டி முடிந்து சாகித் அஃபிரிடி பெவிலியன் திரும்பியபோது, இந்திய நாட்டை சேர்ந்த அஃபிரிடி ரசிகர் ஒருவர் நம் நாட்டின் மூவர்ண தேசிய கொடியை நீட்டி ஆட்டோகிராஃப் கேட்டுள்ளார். அதற்கு சாகித் அஃபிரிடியும் எந்த ஒரு தயக்கமும் காட்டாமல் அந்த கொடியை தன் தொடையில் வைத்து ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் விடியோவாக எடுக்கப்பட்டு அன்றே சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டிருந்ததோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “பெரிய இதயம் கொண்ட பெரிய மனிதர், ஷாகித் அப்ரிடி இந்தியக் கொடியில் ஒரு ரசிகருக்கு ஆட்டோகிராப் கொடுக்கிறார்” என அந்த வீடியோவிற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது, இதற்கு சில ரசிகர்கள் பாகிஸ்தான் ஜாம்பவான் மூவர்ணக் கொடியில் கையொப்பமிட்டு மனதைக் கவரும் சைகையை செய்துள்ளார் என பாராட்ட, மறுபுறமோ பல இந்திய ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். காரணம் தேசியக் கொடி சட்டத்தின்படி, இந்தியக் கொடிகளில் எதுவும் எழுத முடியாது. கொடியில் யாராவது ஏதாவது எழுதினால், அது அவமானமாக கருதப்படுவதால் தான். இதனால், அந்த ஆட்டோகிராப் வாங்கிய இந்திய ரசிகரை பலர் திட்டியும் வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா