உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 63 ஆயிரத்து 920 பேர் சிக்கனர். 2019-ஆம் ஆண்டில் 57 ஆயிரத்து 228 பேர் விபத்தில் சிக்கினர். 2020-ம் ஆண்டில் தமிழகத்தில் 45,484 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் சுமார் 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 
கடந்த 2021 ஆம் ஆண்டு 55,713 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 14,912 பேர் பலியாகி உள்ளனர். இது 2020 ஆம் ஆண்டை விட 6852 அதிகம். இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முன்னணயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 4,22,659 விபத்துகள் நடைபெற்றிருப்பதாகப் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகளில் 3,71,884 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 1,73,860 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இவர்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 24,711 பேர், தமிழ்நாட்டில் 16,685 பேர், மகாராஷ்டிராவில் 16,446 பேர், மத்தியப் பிரதேசத்தில் 13,755 பேர், ராஜஸ்தானில் 10,698 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில், ரயில் விபத்துகள், ரயில்வே கிராஸிங் விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகள் அடங்கும்.
இரண்டு சக்கர வாகன விபத்தைப் பொறுத்தவரை, 69,240 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இவர்களில் அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 8,259 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைவிட இரண்டு சக்கர வாகன விபத்து அதிகரித்த மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 2020-ம் ஆண்டு 46,443-ஆக இருந்த விபத்து எண்ணிக்கை, 2021-ம் ஆண்டு 57,090-ஆக உயர்ந்திருக்கிறது. மொத்தம் நடந்திருக்கும் விபத்துகளில் 20 சதவிகித விபத்துகள் இரவு நேரங்களில் நடந்திருப்பதாகத் தேசிய குற்றஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர் சுப்பிரமணியன்








