தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கு, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி புகையிலை, குட்கா பொருட்களை தடை செய்துள்ளதாகவும், தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தனி நபர்களின் லாபத்திற்காக பொதுமக்களின் சுகாதாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான் என்றும், தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதே சமயம், பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்கள் உரிய அமைப்புகளை நாடி தங்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.







