ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, அங்கு ஆய்வுப் பணிக்குப் பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது, அதாவது குறிப்பிட்ட இந்திய கடல்பகுதியில் இறங்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2024-ம் ஆண்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 7 – 9 மணிக்குள் ககன்யான் சோதனை ஓட்டம் செய்யப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. அதன்படி, இன்று சோதனை விண்கலனை செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் காலை முதலே செய்யப்பட்டன.
இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் விண்களத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். பின் பாராசூட் மூலம், பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும். இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் வங்கக்கடலில் விழுந்த விண்கலத்தை மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது.
சுகன்யா மாதிரி விண்கலம் சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைதொடர்ந்து மோசமான வானிலை காரணமாக இந்த சோதனைக்கு மேலும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டு 8.45 மணிக்கு சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காலை 8;45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டம் இன்று நடக்க முடியவில்லை. இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 5 வினாடிக்கு முன் தானாகவே கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது. எதனால் இவ்வாறு நடந்தது என்பதை ஆய்வு செய்து விரைவில் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.







