சென்னை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட அக்கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே உள்ள பனையூரில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே பா.ஜனதாவினர் சுமார் 50 அடி உயர பா.ஜனதா கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் கொடுக்கம்பத்தை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதாவினரும் அப்பகுதியில் கூடினர். இதனால் இரவு சுமார் 10 மணி முதல் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
இதனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் பா.ஜனதாவினரிடமும் விசாரணை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது நிகழ்விடத்திற்கு வந்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் போலீசாரிடமும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் ஜே.பி.சி. வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதாவினர் ஜே.சி.பி. கண்ணாடியை உடைத்தனர்.
இதற்கிடையே போலீசாருக்கும் பா.ஜனதாவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை ஏற்பட்டது. கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசார் பா.ஜனதாவினரை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதில் பாஜக நிர்வாகி ஒருவர் காயமைடைந்தார். பின்னர் கொடிக்கம்பமம் அகற்றப்பட்டது. பின்னர் கொடி கம்பத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.







