ஈரோடு அருகே பிரதமர் மோடியின் திட்டம் எனக் கூறி பொதுமக்களிடம் ஆசைவார்த்தைக் கூறி ரூ.1 கோடியே 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கோவிந்த நாயக்கன் பாளையம் தாளமடை பகுதியை
சேர்ந்தவர் விஜயசங்கர். கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு நன்கு தெரிவிந்தவர்களான
நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், ஆறுமுகம், மணி ஆகிய மூன்று
பேரும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை பிரதமர் மோடி மீட்டு ஏழை மக்கள் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு வழங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 10 ஆயிரம் ரூபாய் கட்டினால் ரூ.10 லட்சம் தரப்படும் என்றும் ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.1 கோடி தருவதாகவும், அந்த பணம் வங்கி மூலமாகவே வரும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த பணத்தை பெற வருமான வரித்துறைக்கும், ஆடிட்டர் செலுவுகளுக்கும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டி இருக்கும்
என்றும் கூறி உள்ளனர்.
விஜயசங்கரிடம் மட்டுமில்லாமல் அவரது நண்பர்களிடம் இவ்வாறே பணத்தாசையை தூண்டி உள்ளனர். இதனை நம்பி விஜய்சங்கர் முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 80 ஆயிரம் ரூபாயும் கொடுத்து உள்ளார். இதே போல அப்பகுதியை சேர்ந்த பலரும் பணம் கொடுத்து உள்ளனர்.
ஒரு மாதத்தில் பணம் கிடைக்கும் என்று ஜெயச்சந்திரன், ஆறுமுகம், மணி ஆகிய மூவரும் கூறிய நிலையில், இதுவரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் கொடுத்த பணத்தையாவது திருப்பி கொடுக்க கோரி கேட்ட பொழுது தரமுடியாது ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்’ என்று மிரட்டி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விஜயசங்கர் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கபட்டவர்கள், இதே போல 40 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏமாற்றி உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து, சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம் வரை பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் உடனடியாக பணத்தை திருப்பி பெற்றுதருவதோடு, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







