Entire Political Science மாணவர்தான் சினிமா பார்த்து காந்தியை பற்றி தெரிஞ்சுக்கனும்.. என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் குறித்து காந்தி எனும் சினிமா வந்த பின்னர்தான் தெரியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக Entire Political Science படிப்பு படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை சினிமாவை பார்த்து தெரிந்து கொள்வர் எனவும் மோடியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடி பேசுகிற ஒவ்வொரு பேச்சுமே பெரும் சர்ச்சையாகவும் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. முஸ்லிம்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார் மோடி; காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையே முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை என்றார். உங்களது சொத்துகளை பறித்து முஸ்லிம்களுக்கு தரப் போகிறது காங்கிரஸ் என்றார். ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிகளுக்கு தரும் காங்கிரஸ் என்றார். இவை அனைத்தும் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது.
அத்துடன் பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவியே தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது; தமிழரான விகே பாண்டியன் தமிழ்நாட்டில் கொண்டு போய் பதுக்கி வைத்துவிட்டார் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்தது.
இந்த வரிசையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை திட்டமிட்டே பாதிப்படையச் செய்துவிட்டனர்; ஒடிஷாவில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் நவீன் பட்நாயக் உடல்நிலை பாதிப்பு குறித்து விசாரிப்போம் என கூறியிருந்தார் மோடி.
இதனை தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றில், தேச விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் குறித்து மோடி கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது நமது நாட்டில், காந்தி எனும் சினிமா வராமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியை பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது என்பதுதான் மோடியின் கருத்து.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில், Entire Political Science படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை சினிமா பார்த்து தெரிந்து கொள்வார் என காட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, Entire Political Science என்ற பட்டப் படிப்பு படித்ததாக ஒரு சர்ச்சை இருக்கும் நிலையில் அதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்திருக்கிறார் என்று உலகத்தின் பலருக்கு தெரிந்திருக்கிறது. என்று பேட்டியில் சொல்லியுள்ளார் மோடி. காந்தியின் புகழை சீர்குலைக்க வேண்டுமென்று இப்படியொரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அவரின் வரலாற்றைப் பற்றி சிறிதும் அறியாத மோடி என காட்டமாக விமர்சித்துள்ளார்.







