உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆக கே.வி.விஸ்வநாதன் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். இதில் கடந்த 2 நாட்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரியும், எம்.ஆர்.ஷாவும் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது 32 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அவர்களை கொண்டு நீதிமன்றம் இயங்கி வந்தாலும், நீதிபதிகளுக்கான மீதமுள்ள 2 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இதுதவிர வரும் ஜூலை 2-வது வாரத்தில் மேலும் 4 காலி பணியிடங்கள் ஏற்பட கூடிய சூழல் இருப்பதால், தற்போது உள்ள 2 பணியிடங்களை மிக விரைவில் நிரப்ப கொலீஜியம் முடிவெடுத்துள்ளது.
பொதுவாகவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்ற விஷயங்களை எல்லாம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, ‘கொலீஜியம்’ நீதிபதிகள் குழுவை சேர்ந்தவர்கள் தான் முடிவெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது வழக்கம்.
அந்த வகையில் உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்யும் விஷயத்திலும், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் அமைப்பு 2 பேரை பரிந்துரை செய்து உள்ளது.
இதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகிய இருவரையும் நீதிபதிகளாக பதவி உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், நீதிபதி ஜே.பி.பர்திவாலா வரும் 2030 ஆகஸ்டு 11-ந் தேதி ஓய்வு பெறுகின்ற போது, நீதிபதி கே.வி. விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2031 மே 25 ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது நடக்கும்பட்சத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் 3வது தமிழர் என்ற பெருமையை கே.வி. விஸ்வநாதன் பெறுவார். இதற்கு முன்னர் பதஞ்சலி சாஸ்திரி, பி.சதாசிவம் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கே.வி.விஸ்வநாதன்?
கோவை சட்டக் கல்லூரியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில், வழக்கறிஞராகப் பதிவு செய்து, சட்டப் பணியைத் தொடங்கினார். கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து வரும் இவர், குற்றவியல் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், வணிகச் சட்டம், திவால் சட்டம், நடுவர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு சட்டம் சார்ந்த வழக்குகளில் ஆஜராகி தனது திறமையை நிரூபித்தவர் ஆவார்.
தற்போதும் கூட நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில் வரும் 2031- ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியில் இருப்பார் என்றும், 2030- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா









