மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்…

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினரான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லாஹ் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின்
“ இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர்  புதுகை அப்துல்லா  இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1653002617868685312

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.