நீலகிரியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ..!! சிறப்புப் பூஜை செய்து வழிபாடு

நீலகிரியில், ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே பூக்கும், பிரம்மக் கமலம் பூக்கள், பூத்துக் குலுங்குவதால், ஏராளமானோர் செல்ஃபி எடுத்தும், சிறப்புப் பூஜை செய்து வழிபட்டும் மகிழ்ந்தனர். பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி என்றழைக்கபப்டும் இந்த…

நீலகிரியில், ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே பூக்கும், பிரம்மக் கமலம் பூக்கள், பூத்துக் குலுங்குவதால், ஏராளமானோர் செல்ஃபி எடுத்தும், சிறப்புப் பூஜை செய்து வழிபட்டும் மகிழ்ந்தனர்.

பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி என்றழைக்கபப்டும் இந்த பூவானது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை செடியாகும். இவை கள்ளி செடி வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த பிரம்ம கமலம் பூக்கள் இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும். நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் வீசும். ஒரே செடியில் 10க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது.

பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதிலும் இந்த அற்புத மலரானது, உத்ரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் மட்டுமே அதிகம் காணமுடியும். தற்போது தமிழகத்தில் மிக மிக விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளது என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் செடியை வளர்ப்பது பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை நாமும் வளர்க்கலாம்.

இத்தகைய அபூர்வ வகை பிரம்மகமல பூவானது, பந்தலூர் அருகே, கொளப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும், செந்தில்குமாரின் வீட்டில், ஒரே செடியில் 15க்கும் மேற்பட்ட பிரம்மக் கமலம் பூக்கள் பூத்துள்ளன. இதனால் தங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று கருதி, அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர், செல்ஃபி எடுத்தும், அந்தப் பூக்களுக்கு சிறப்புப் பூஜை செய்தும் வழிபட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.