கள்ளச்சாராயம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவு பல உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும், நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதில், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராய விற்பனையிலும் சாதி பாகுபாடு இருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும், எக்கியார்குப்பத்தில் இரு பிரிவினருக்கென தனித்தனியாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதும், எக்கியர்குப்பத்தில் ஏலம் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததும், நியூஸ் 7 தமிழ் கள ஆய்வில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசே டாஸ்மாக் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகின்றன. வெல்லம், வேப்பம் பட்டை, கடுக்கா, அழுகிய பழங்களை ஊற வைத்து தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்களை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அதன் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஊறல் போட்டு தயாரிக்க முடியாது என்பதால், கடலோர மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகின்றனர் முன்னாள் காவல்துறை அதிகாரிகள்.
இதையும் படியுங்கள் : மெத்தனாலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
சாராயம் என்பது எத்தனால், மெத்தனால் என இரு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. மதுபானங்கள் அனைத்திலும் சிறிதளவு எத்தனால் கலக்கப்படுகிறது என்றாலும், அது மனித உடலில் இருந்து தானாகவே வெளியேறிவிடுகிறது. ஆனால் மெத்தனால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம் உடலுக்குள் அமிலத்தன்மையை அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளச்சாரயம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடையை மீறி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் ஒருசில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்கு அதன் ஆபத்து குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவது அவசியமாகிறது.







