மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை கடைகளுக்கான நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 4 மணி நேரம் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால்,பல்வேறு சிக்கல்களை தாங்கள் சந்திப்பதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அன்றாட தேவைகளுக்கு மட்டுமே பொருட்களை வாங்கும் நிலையில்தான் உள்ளார்கள் எனவும், மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் ஒரு பகுதியில் உள்ள கடையை சார்ந்து குறைந்தபட்சம் 100 பேர் இருக்கும் நிலையில், 4 மணி நேரத்துக்குள் அவர்கள் பொருட்களை வாங்க வேண்டும் என்பதால் நெருக்கடியான சூழல் ஏற்படுவதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.
மளிகை கடைகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துவிட்டு, ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ள வணிகர்கள்,ஊரடங்கு விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்படுவது, வணிகர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னையாக இருப்பதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். தாங்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், அபராதம் வசூலிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும், வணிகர்களிடம் அதிகாரிகள் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மளிகைக் கடைகளை திறந்து வைத்திருப்பதற்கான நேரத்தை அதிகரித்தால், மக்கள் ஒரே நேரத்தில் கூடுவது குறையும் என தெரிவித்துள்ள வணிகர்கள், பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இந்த பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றிவரும், வியாபாரிகளை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.







