நியூஸ் 7 தமிழ் கோரிக்கையை தமிழக அரசு ஏற்பு!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்பு தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து…

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்பு தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து காட்சி ஊடக நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னலம் இன்றி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் உள்ளிட்ட கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.


மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத்துறையினரின் பங்கு மகத்தானது என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு தேவை என்றார்.

நியூஸ் 7 தமிழ் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், பேசிய போது, அமைச்சர்களின் செய்தியாளர் சந்திப்புகள், சமூக இடைவெளியுடன் இருக்கும் வகையில், ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல்

கொரோனா தொடர்பான சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், தகவல்களை ஊடகத்துறையினர் உறுதிசெய்து கொள்ள, ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தியாகச்செம்மல் முன்வைத்தார்.

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள், காட்சி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவரும் முன்களப் பணியாளர்களாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பான தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நியூஸ் 7 தமிழ் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது குறித்து, மக்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும் வகையில், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் வலியுறுத்தியவை குறித்து பரிசீலிக்கப்படும் எனவும், முன்களப் பணியாளர்கள் குறித்த தெளிவான அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறினார்.

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக, செய்தி ஆசிரியர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த ஆலோசனைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.