கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று – பிறந்த குழந்தைகளின் மூளையை பாதித்ததாக அதிர்ச்சி தகவல்

கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல்…

கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கும் கூட சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆங்காங்கே செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : அந்தமான், நிகோபார் தீவுகளுக்கு அருகே கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, வலிப்பு ஏற்பட்டதும், உடல் வளர்ச்சி தாமதமானதும் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஒரு குழந்தை பிறந்த 13 மாதங்களிலேயே உயிரிழந்துள்ளது.

பிறக்கும்போது இந்த குழந்தைகள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், அவர்களின் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் ஆய்வு செய்தனர். அப்போது தாயையும் சேயையும் இணைக்கும் தொப்புள்கொடி (நஞ்சுக்கொடி) மூலம் தொற்று பரவியது தெரியவந்தது.

இறந்துபோன குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அதன் மூளையில் கொரோனா வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்தனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவர்களிடம் அதுபற்றி தெரிவித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.