பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதி செய்யவும் 1,718.56 கோடி நிதியை இந்தியப் பருத்திக் கழகத்திற்கு (Cotton Corporation of India) வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ”2023-24 பருத்தி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பருத்தியைக் கொள்முதல் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகள் நேரடியாகப் பலன் பெறுவார்கள். சந்தையில் பருத்தி விலை வீழ்ச்சியடையும் காலங்களில், விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்க, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த நிதி ஒதுக்கீடு உறுதி செய்யும்.
பருத்தி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலமும், வலுவான கொள்முதல் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஜவுளித் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நிதி உதவியுடன், இந்தியப் பருத்திக் கழகம் தனது வலுவான கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பருத்தியைப் பெற்று, அதற்கான தொகையை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள” எனக் கூறினார்
மேலும் அவர், பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) என்ற பாரத் தொழில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்குவதற்காக 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்







