ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா,  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி…

அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா,  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நவம்பர் 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க 101  எம்எல்ஏக்கள் தேவை. எனவே ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்,  பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது.  ராஜஸ்தான் மாநில தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன.  அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை உருவாக்கும்; மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவும் சாத்தியம் எனவும் சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.  ராஜஸ்தானின் உதய்ப்பூரில் பாஜக வேட்பாளர் தாராசந்த் ஜெயினை ஆதரித்து குலாப் சந்த் கட்டாரியா பிரசாரம் செய்தார்.  ஒரு மாநில ஆளுநராக பதவி வகிப்பவர் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது நடைமுறை.  இதனை மீறி அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பிரசாரம் செய்திருப்பது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி,  காங்கிரஸ் கட்சிகள் புகார் கொடுத்துள்ளன.  அதில், ஆளுநர் கட்டாரியா தேர்தல் பிரசாரம் செய்தது அப்பட்டமான அரசியல் சாசன மீறல்;  சட்டவிரோதமானது;  ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் அசாம் ஆளுநர் பதவியில் இருந்து குலாப் சந்த் கட்டாரியா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.