“ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (20.1.26) தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு எங்கே போச்சு? ஜனநாயகம் எங்கே போச்சு? என முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளது. ஆனால், நாட்டிலேயே சூப்பர் முதல்வர் என தன்னைத்தானே மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொள்கிறார். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை எனும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாடு, போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருப்பதால் தினந்தோறும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் 55% அதிகரித்துள்ளது என்பதை ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது கருத்துக்களையும் பதிவு செய்கிறார். ஆளுநர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அதிமுக அது போல் செய்தது இல்லை. தவறான உரையை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்வது நியாயம். தனது தவறை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய கீதம் தொடர்பாக ஆளுநர் கூறியதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.