சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்ட போது, 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் பல முதலீடுகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். இரு நாடுகளிலும் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், பல்வேறு தொழிற்சாலைகளையும் பார்வையிட்டார். இந்த பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒன்பது நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது, விமானநிலையத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில், 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறினார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில், மே 23 – 31 ஆம் தேதி வரையிலான முதலமைச்சர் ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் வெளிவராத நிகழ்வுகளும் உள்ளன.
அவை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்:
மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. கடலில் மீன்களை பிடித்தது முதல் ஏற்றுமதி வரையான தர பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வரவுள்ளது.
சீர்மிகு தொழிற்பள்ளியை (School of Excellence ) அமைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஜப்பானில் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டிலிருது தொழிலாளர்களை தகுதிப்படுத்தி அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக, தமிழ்நாடு அரசு சார்பாக ஜப்பான் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாகனங்கள் உற்பத்திக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தயாராகவுள்ளதாக ஜப்பான் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன
ஐ போன்கள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.
தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள், டெல்டா மாவட்டங்களில் உணவு துறை சார்ந்து தரம் உயர்த்தப்பட்ட பொருட்களுக்கான ஆலைகள் கொண்டு வர பேச்சுவார்த்தை.
திட்டமிடப்படாத தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆர்வமுடன் சந்தித்து தமிழ்நாட்டின் தொழிற் வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்த போதிலும், முதலீடு மேற்கொள்ள நிறுவனங்கள் உறுதியான முடிவெடுத்த பின்னரே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கண்டிப்பாக செயல்பாட்டிற்கு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.
கடந்த மாநாடுகளைவிட 2024 உலக முதலீட்டாளர் மாநாடு பெரிய அளவில் நடத்தப்படுவதுடன், முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டினரின் நேரம் தவறாமையை பாராட்டியுள்ளார் .
- பி.ஜேம்ஸ் லிசா









