2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் சேலத்தில் இன்று (டிச.29) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. பிறகு, பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்னைகள் மற்றும் அரசியல் சம்பந்தமான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டாக்டர் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சேலத்தில் தங்கியுள்ளனர். முன்னதாக, இந்த மாநாடு தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு அளிக்கும்” என தெரிவித்திருந்தார்.







