தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்கவும்: நீங்கள் சாக்லேட் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா?
21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
17.03.2023 முதல் 18.03.2023 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை முதல் சென்னையை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர் உள்ளிட்ட நகரில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.







